Showing posts with label மன அமைதி. Show all posts
Showing posts with label மன அமைதி. Show all posts

Monday, May 2, 2011

தவம்



     தவம் செய்தால் என்னதான் கிடைக்கும்?தவம்  எதற்கு ? தவம் செய்தல் என்றால் அறிவில் உயருவது என்று பொருள் கொள்ளலாம். தவம் செய்தலால் மன வலிமை , மனோ தைரியம் திடம் முதலானவை கிடைக்கும்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய் தவம்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
என்பது அய்யன் வள்ளுவன் வாக்கு ...
     ஆம் தவம் இருந்தலால்  நாமும் எண்ணிய என்னத்தை ஈடேற்றி கொள்ளலாம். ஆயினும் அதனுள் ஒரு ஆழ்ந்த உண்மை உள்ளது. இறை தவத்தில் உண்மையாக நாம் ஈடு பட்டோமேயானால் பலனை அடையும் நேரத்தில் நாம் அதை விரும்பும் எண்ணத்தில் இருந்து விலகியே இருப்போம். ஆம் அந்த அளவு நம் மனதை சீர் செய்து அதன் பக்குவத்தை உயரத்தி தருவதும் தவமே. அதையும் மீறி அந்த பக்குவத்தை அடையாதவர்கள் போய் சேர்ந்த பாதையை பற்றியும் புராண இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கும்.

     ஆழ்ந்து சொன்னால் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் . உண்மையாக தவம் செய்தால் எண்ணங்கள் வலிமை அடையும். எண்ணம் ஈடேறும்.
[யத்பாவம் தத்பவதி- வேதம்  ]
     சரி இப்படி தவத்தின் வலிமைகள் உள்ளனவே . இதை நமக்கு உணர்த்த ஒரு தெய்வம் இருக்க வேண்டும் அல்லவா ??? இவ்வாறு பல இடங்களில் இறை வடிவங்கள்( பெருமாள், நாச்சியார், அன்னை, தேவர்கள், முருகன்)  தவத்தின் பலனை நமக்கு எடுத்து சொல்லி தருகின்றனர். இமவான் மகளான அன்னையும், பர்வதன் மகள் தாம் பார்வதியும் தவம் செய்தே பலனை பெற்றனர். அது போல காஞ்சி, ஆனைக்கா இப்படி பல இடங்களில் அன்னை தவம் செய்து இருக்கிறாள் என்பது புராணம்.




     பல இடங்களில் அன்னை தவம் இருத்தல் பெரும்பாலும் இறைவனை அடைய அல்லது அசுரரை அழிக்க என்று இருக்கும் . ஆனால் ஒரு தலத்தில் இறைவன் ஒருவனே என்று உணர்த்த அவள் தவம் இருக்கிறாள். ஹிந்து வழிபாட்டு முறையில் சைவமும் வைஷ்ணவமும் சிறப்பாக உள்ளது. காலத்தின் கோலத்தால் சில நேரங்களில் அவர்களுக்குள் யார் பெரியவர் என்கிற பிரச்சனைகளும் வந்தது உண்டு. அதனால் தான்
     அரியும் சிவனும் ஒன்னு ..
     இதை அறியாதவன் வாயுல மண்ணு என்னும் படியான சொல்லும் வந்தது.
     மதுரையிலும் சிவனே பெருமாளாய் வந்த கதையும் உண்டு . இவை எல்லாவற்றிக்கும் மேலாக சங்கரநாராயணர்(அரி-சிவன்) வடிவம் இந்த ஒற்றுமைக்கு ஒரு அடித்தளம்.
“ஒன்றே என்னின் ஒன்றேயாம்

     இந்த வடிவத்தை காணவே ஒரு அன்னை தவம் இருந்தாள். ஆம் மக்களின் நலனுக்காக இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும் என்று அறியையும் சிவனையும் ஒன்றாய் காண்பேன் என்று ஒற்றை காலில் நின்று தவம் செய்து தவத்தின் பெருமையை உணர்த்திய அன்னை தான் கோமதி.

கோமதி – ஆம் சங்கரன்கோவிலின் அரசி.




     சங்கரன் கோவில் – நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் பிரதான தெய்வமாய் தவத்தின் மணிமகுடமாய் , தவத்தின் பலனாய் சங்கரநாரயணரும் காட்சி தர சங்கரலிங்கதோடு அருளாட்சி புரிகிறாள் அன்னை.
      மாதத்தின் கடைசி வெள்ளிகிழமைகளில் அன்னைக்கு தங்க பாவாடை சார்த்த படுகிறது. 
        பாரதியும் கோமதி மகிமை என்னும் தலைப்பில் பாடல்கள் எழுதி இருக்கிறார். 
     சங்கரன் கோவில் ஒரு பிரார்த்தனை தலமும் கூட . சுற்றுவட்டாரத்தில் மக்கள் எங்கும் பாம்பை கண்டால் ஒரு முறை சங்கரன்கோவிலுக்கு செண்டு விட்டு வருவார்கள். மேலும் பல ஊர்களில் கோமதி, ஷங்கர் என்னும் பெயர்கள் வைக்கும் பழக்கமும் உள்ளது.
     அன்னை சிறு பெண் வடிவத்தில் கண்ணுக்கு நிறைவாக இருக்கிறாள். ஸ்ரீசக்கர குழியும் உண்டு இந்த தலத்தில்.



     ஆடி மாதம் அன்னை தபசு (தவம்) இருந்து சங்கர நாரயணரை காண்பாள். அவள் தவசு இருக்கும் காலத்தில் நாமும் சென்று அவளை வழிபாட்டு நம் கோரிக்கையை சொன்னால் தட்டாது நிறைவேற்றும் அன்னை இவள். அன்னை வரப்பிரசாதி என்பதை ஒவ்வொரு ஆண்டும் கூடும் கூட்டமே சாட்சி.
மேலும் கோமதியின் உண்மையான பக்தர்கள் அவர் பெயர் சொன்னாலே கண் கலங்கும் அளவுக்கு அவள் அருலாடல் செய்து உள்ளாள் என்பதற்கு சாட்சி.
ஆக அன்னை விளக்கும் தத்துவம் தான் என்னே ??
     சுயநலம் கருதாது உலக நன்மைக்காக செய்யும் எந்த ஒரு விஷயமும் தோல்வியுற்றதாய் சரித்திரமே இல்லை. மேலும் செய்யுங்கள் தவம் அந்த ஆற்றலை, மனதிடத்தை நான் வழங்குகிறேன்.
     மேலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளும் நாம் முதலில் வைஷ்ணவம், சைவம் என்ண்டும் இரு பேரு தூண்களில் சிக்கி அதுவா இதுவா என்னும் குழப்பத்தில் இருக்கும் காலத்தில் நம் மனத்தை சீர் செய்து இருவரும் ஒருவரே என்று உணர்த்தி நம்மை மேன்மை படுத்துகிறாள் அன்னை கோமதி.

கோமதி தாயே சரணம் .. உன் பாதார விந்தங்களே போற்றி போற்றி ....
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்


Tuesday, April 19, 2011

மனோன்மணி


மனோன்மணி

                என்ன சுந்தரம் பிள்ளையின் காவியம் நினைவிற்கு வருகிறதா ? இல்லை இவள் அன்னை மனோன்மணி...

                மனோன்மணி = மனங்களை தட்டி எழுப்புபவள்
        ஆன்மாக்களின் குற்றங்களை நீக்கிப் பரம்பொருளை அடைவதற்கு வழிகாட்டுபவள்.
                ஆக இந்து முறையில் தெய்வ வரிசையில் பெண் வடிவில் விளங்கும் சக்தி இவள். அன்னை பல இடங்களில் இந்த திருநாமத்தில் அருள் வெள்ளம் வழங்குகிறாள். திருவாரூர் நாயகியாம் கமலாம்பிகையின் உற்சவர் நாமமும் மனோன்மணி அம்மை தான் .. கமலாம்பிகயே யோகத்தின் வடிவம் .ஆக அவள் உற்சவரும் யோக வடிவினள். மேலும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி( வைணவ மரபில் தோதாத்ரி சீவரமங்கை) தலத்திற்கு அருகில் இருக்கும் வடக்கு விஜய நாராயணம் தலத்திலும் அன்னை மனோன்மணி சமேத மனோன்மணீஸ்வரர் ஆலயம் உண்டு.

சரி இந்த மனோன்மணி அன்னை எதற்கு ? அவளின் வேலை என்ன?
                மனித மனம் இயல்பாகவே அலை பாயும் தனிமை கொண்டது அல்லவா? மனம் ஒன்றி நாம் இறைவனோடு பொருந்தி இருந்தாலும் பல நேரங்களில் நம் மனம் மீண்டும் அதை விட்டு விலகி விடுகிறது . இப்படி மனம் பல இடங்களில் வைராக்கியத்தை இழக்கும் போது அதை மீட்டு நமக்கு தரும் அன்னை இவள்.
                அது மட்டுமா ? சாக்த மரபில்( பெண் தெய்வ வழிபாட்டில்) அன்னையின் அழகை வருணிக்கும் போது பெண்மையின் அடையாளங்கள் பற்றி சொல்ல படும் . அந்த நேரத்தில் மனம் கிளர்ச்சி அடையக் கூடாது.
அவ்வாறு மனித மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை மாற்றி மனதுக்கு இதம் அளிப்பவளாக விளங்குகிறாள் அன்னை.
இதே எண்ணத்தில் தான் அபிராமி பட்டரும் தன்னுடைய ஐந்தாம் பாடலிலும் 
“பொருந்திய முப்புரை செப்புரை செய்யின், புணர்முலையால்
வருந்திய வஞ்சி, மருங்குல் மனோன்மணி
, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

                இங்கே அன்னையின் திரு மார்புகளை பற்றி சொன்ன அபிராமி பட்டர் மனித மனத்தை  சீர் செய்யவே அன்னையின் திருநாமத்தை பொருத்தி இருக்கிறார்.
                மேலும் அந்த பாடலின் திரண்ட பொருளிலும் நஞ்சை அமுதாக்கிய பதம் வரும். ஆக நம்முடைய மனதில் தோன்றும் நஞ்சை (தீய எண்ணங்களை ) அமுதாக்கும் ( நல்லவையாக ) மாற்றும் அன்னை என்பதும் திண்ணமாய் விளங்கும்.
                மேலும் குண்டலினி தவ முறையிலும் மனோன்மணி தவம் வரும் . அங்கேயும் ஒரு மணியின் ஒளியை கேட்க செய்து தவம பூர்த்தி ஆகும் . அந்த பொழுதில் நம் மனதில் நினைப்பவை உடனயே நடக்குமாம்.
ஆக மனோன்மணி என்பவள் மனதை சீர் செய்து மனித மனம் நேராக இருக்க வழி வகுப்பவள். 
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்