Wednesday, April 4, 2012

சித்தூர் - பங்குனி உத்திரம்


சித்தூர்

இன்று பங்குனி உத்திரம் . அற்புதமான நாள் .ஆண்டாள் ரங்கனை அடைந்ததும், முருகன் தெய்வானையை மணந்ததும் , குலசேகர ஆழ்வாரை திருவாழ்மார்பன் வைகுந்தம் அழைத்து சென்றதும் இந்த உன்னதமான நாள் தான் ...

பங்குனி மாதம் உத்திரம் நக்ஷதிரத்தை ஒட்டியே பௌர்ணமி வரும் . சித்திரா பௌர்ணமி (சித்திரை -சித்திரை) வைகாசி சாகம் (வைகாசி -விசாகம் ) போல  ஒரு விசேஷமான நாளாய் கருதப்படும் இந்த உத்திரம். தென் மாவட்டங்களில் குடும்ப கோவில்(சாஸ்தா கோவில்) என்று சொல்லப்படும் குல தெய்வ கோவில் வழிபாடு கட்டாயம் செய்ய பட வேண்டிய நாளாய் இந்த பங்குனி உத்திரம் அமைய பெற்றுள்ளது .

 நாம் என்ன தான் பெரிய பெரிய கோவில்களுக்கு சென்று எவ்வளவு வணங்கினாலும் நம்முடைய குல தெய்வம் அருள் செய்தால் மட்டுமே வாழ்வில் நல்ல நிலைக்கு விரைவாக செல்லலாம் . பெற்ற தாயை பட்டினி போட்டு ஊருக்கு அன்னதானம் வழங்கினால் புண்ணியமா பாவமா? அது போல தான் குல தெய்வத்தை பட்டினி போடுவதும் மகா பாவம் ஆகும் . குல தெய்வம் மனம் இறங்கினால் நாம் விரைவாக நம் கவலைகளில் இருந்து விடு படலாம் . குலதெய்வத்தை பெரியோர்களின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.


 ஒரு வேளை குல தெய்வம் யாரென்று தெரியாவிட்டால் ?பூட்டு என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக சாவி இருக்கும் அல்லவா ? அது போல எல்லா கேள்விகளுக்கும் விடையும் இருக்கும் . குல தெய்வம் இன்னதென அறியாதவர்கள் தங்கள் குல தெய்வமதை அறிய  சில வழிகள் உள்ளன . எனக்கு அறிந்த வழி ஒன்றை கடைசியில் சொல்லுகிறேன் . மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குல தெய்வம் யாரென்று தெரியாதவருக்கு எல்லாம் குல தெய்வமாய் இருந்து காப்பவர் தான் சித்தூர் தென்கரை மகாராஜா. சத்தியத்திற்கு சாட்சியாக திருநெல்வேலி மாவட்டம் வெளியூர் அருகே , ராதாபுரம் வட்டம் , கண்ணநல்லூர் கிராமம் சித்தூரில் அருள்கிறார் தென்கரை மகாராஜன் .அது என்ன தென்கரை ?
நம்பியாற்றின் தென்கரை . நம்பியாறு ? எங்கோ கேள்வி பட்டது போல இருக்கிறதா ? நம்பியாறு நம்பி மலையில் இருந்து (திருக்குறுங்குடி அருகில் ) பிறந்து ஓடி வரும் ஆறு . இந்த ஆற்றின் தெற்கு கரையில் சாந்தமே உருவாக சத்தியமே வடிவாக தனி கோவிலில் மூலஸ்தானத்தில் தென்கரை மகாராஜன் அருள்கிறார் . வலப்பக்கம் அவரது படைவீரர் தளவாய் மாடன் சுவாமி , இடது புறம் கருணையே வடிவாய் கொண்டவள் , தாய்க்கு எல்லாம் தாய் மருதாணி மர மூட்டில்(மரத்தடியில்) சிவப்பு வண்ணத்தில் பேச்சி அம்மன் (பேச்சுக்கு அம்மன்-ஞான தாய்) . இவர்கள் மூவரும்  சுத்த மார்க்கத்தை (சைவ படையல்) சார்ந்தவர்கள் . சுற்றிலும் வீரமணி (முன்னோடி ),வன்னி மாடன் என பல பல உருவம் உள்ள, உருவம் அற்ற (பீடம் மட்டுமே கொண்ட) சுத்த ,அசுத்த (அசைவ படையல் ஏற்பவர்) என கிராம தெய்வங்கள் .

 ஆக சித்தூர் தனிலே பல பீடங்கள் பலருக்கு குடும்ப தெய்வமாக உள்ளது. அது போக குடும்ப கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் , குடும்ப கோவில் இன்னதென அறியாதார் எல்லாருக்கும் குடும்ப தெய்வமாய் இருந்து அவர்கள் வாழ்வின் எல்லா சுகங்களையும் அருள்பவர் தென்கரை மகாராஜன்.

View Larger Map
முற்காலத்தில் சித்தூரில் ஏழு வீடுகள் மட்டுமே இருந்ததாம் . அதுவும் கோவிலோடு சம்பந்த பட்டவர்கள் வீடு மட்டுமே. பூசாரி , பூ தொடுப்பவர் , மேளம் வாசிப்பவர் என அவர்கள் குடும்பம் மட்டுமே இருந்ததாம் . தற்பொழுது வீடுகள் பல உள்ளன .

இங்கே மகாராஜவிக்கு கட்டுப்பட்டு காலம் காலமாக நடக்கும் ஒரு நிகழ்வு தான் வன்னி குத்து. வன்னி குத்து எனப்படுவது ஒரு சிறிய ஆட்டு குட்டியை கூறிய வேலால் தூக்கி பிடித்து கொண்டே பல தூரம் ஆராசனம் (அருள்) வருபவர் கொண்டு வருவார் . மாடன் சன்னதி முன் அந்த  ஆட்டு குட்டியை இட்டு அதன் காயத்தில் சிறிது மஞ்சனையும் , திருநீறும் இட ஆடு எழுந்து செல்லுமாம் , அடுத்த வருடம் முதல் பலி அந்த ஆடு தானம் .இது தான் வன்னி குத்து என்பது. இது போல பல நேர்ச்சைகள்(ஆனி செருப்பு - முள் பாதம் , பிரம்பு கொடுப்பு என) கோவிலில் நடை பெறும்.
குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முஹூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய் விட்டு ஒரு அகல் விளக்கு (நந்தா விளக்கு என்றால் நல்லது ) ஏற்ற வேண்டும் . அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும் . அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும் . இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி , சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உணமையான தகவல் உங்களை வந்து சேரும் .
வாழ்வில் ஒரு முறையேனும் சித்தூருக்கு செல்லுங்கள் . உங்கள் வாழ்வு கரும்பாய் தித்திக்கும் .
பெயருக்கேற்றார் போல் சித்தூர் சிறிய ஊர் தான் . பங்குனி உத்திரம் அன்று மட்டுமே களை கெட்டும். மற்ற படி மாதா மாதம் வரும் உத்திரம் நாளிலும் கோவிலில் சிறு கூட்டம் வரும் .

அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்

1 comment:

  1. என் குலதெய்வத்தை எடுத்துரைத்தமைக்கு நன்றி

    ReplyDelete