Wednesday, April 4, 2012

சித்தூர் - பங்குனி உத்திரம்


சித்தூர்

இன்று பங்குனி உத்திரம் . அற்புதமான நாள் .ஆண்டாள் ரங்கனை அடைந்ததும், முருகன் தெய்வானையை மணந்ததும் , குலசேகர ஆழ்வாரை திருவாழ்மார்பன் வைகுந்தம் அழைத்து சென்றதும் இந்த உன்னதமான நாள் தான் ...

பங்குனி மாதம் உத்திரம் நக்ஷதிரத்தை ஒட்டியே பௌர்ணமி வரும் . சித்திரா பௌர்ணமி (சித்திரை -சித்திரை) வைகாசி சாகம் (வைகாசி -விசாகம் ) போல  ஒரு விசேஷமான நாளாய் கருதப்படும் இந்த உத்திரம். தென் மாவட்டங்களில் குடும்ப கோவில்(சாஸ்தா கோவில்) என்று சொல்லப்படும் குல தெய்வ கோவில் வழிபாடு கட்டாயம் செய்ய பட வேண்டிய நாளாய் இந்த பங்குனி உத்திரம் அமைய பெற்றுள்ளது .

 நாம் என்ன தான் பெரிய பெரிய கோவில்களுக்கு சென்று எவ்வளவு வணங்கினாலும் நம்முடைய குல தெய்வம் அருள் செய்தால் மட்டுமே வாழ்வில் நல்ல நிலைக்கு விரைவாக செல்லலாம் . பெற்ற தாயை பட்டினி போட்டு ஊருக்கு அன்னதானம் வழங்கினால் புண்ணியமா பாவமா? அது போல தான் குல தெய்வத்தை பட்டினி போடுவதும் மகா பாவம் ஆகும் . குல தெய்வம் மனம் இறங்கினால் நாம் விரைவாக நம் கவலைகளில் இருந்து விடு படலாம் . குலதெய்வத்தை பெரியோர்களின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.


 ஒரு வேளை குல தெய்வம் யாரென்று தெரியாவிட்டால் ?பூட்டு என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக சாவி இருக்கும் அல்லவா ? அது போல எல்லா கேள்விகளுக்கும் விடையும் இருக்கும் . குல தெய்வம் இன்னதென அறியாதவர்கள் தங்கள் குல தெய்வமதை அறிய  சில வழிகள் உள்ளன . எனக்கு அறிந்த வழி ஒன்றை கடைசியில் சொல்லுகிறேன் . மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குல தெய்வம் யாரென்று தெரியாதவருக்கு எல்லாம் குல தெய்வமாய் இருந்து காப்பவர் தான் சித்தூர் தென்கரை மகாராஜா. சத்தியத்திற்கு சாட்சியாக திருநெல்வேலி மாவட்டம் வெளியூர் அருகே , ராதாபுரம் வட்டம் , கண்ணநல்லூர் கிராமம் சித்தூரில் அருள்கிறார் தென்கரை மகாராஜன் .



அது என்ன தென்கரை ?
நம்பியாற்றின் தென்கரை . நம்பியாறு ? எங்கோ கேள்வி பட்டது போல இருக்கிறதா ? நம்பியாறு நம்பி மலையில் இருந்து (திருக்குறுங்குடி அருகில் ) பிறந்து ஓடி வரும் ஆறு . இந்த ஆற்றின் தெற்கு கரையில் சாந்தமே உருவாக சத்தியமே வடிவாக தனி கோவிலில் மூலஸ்தானத்தில் தென்கரை மகாராஜன் அருள்கிறார் . வலப்பக்கம் அவரது படைவீரர் தளவாய் மாடன் சுவாமி , இடது புறம் கருணையே வடிவாய் கொண்டவள் , தாய்க்கு எல்லாம் தாய் மருதாணி மர மூட்டில்(மரத்தடியில்) சிவப்பு வண்ணத்தில் பேச்சி அம்மன் (பேச்சுக்கு அம்மன்-ஞான தாய்) . இவர்கள் மூவரும்  சுத்த மார்க்கத்தை (சைவ படையல்) சார்ந்தவர்கள் . சுற்றிலும் வீரமணி (முன்னோடி ),வன்னி மாடன் என பல பல உருவம் உள்ள, உருவம் அற்ற (பீடம் மட்டுமே கொண்ட) சுத்த ,அசுத்த (அசைவ படையல் ஏற்பவர்) என கிராம தெய்வங்கள் .

 ஆக சித்தூர் தனிலே பல பீடங்கள் பலருக்கு குடும்ப தெய்வமாக உள்ளது. அது போக குடும்ப கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் , குடும்ப கோவில் இன்னதென அறியாதார் எல்லாருக்கும் குடும்ப தெய்வமாய் இருந்து அவர்கள் வாழ்வின் எல்லா சுகங்களையும் அருள்பவர் தென்கரை மகாராஜன்.

View Larger Map
முற்காலத்தில் சித்தூரில் ஏழு வீடுகள் மட்டுமே இருந்ததாம் . அதுவும் கோவிலோடு சம்பந்த பட்டவர்கள் வீடு மட்டுமே. பூசாரி , பூ தொடுப்பவர் , மேளம் வாசிப்பவர் என அவர்கள் குடும்பம் மட்டுமே இருந்ததாம் . தற்பொழுது வீடுகள் பல உள்ளன .

இங்கே மகாராஜவிக்கு கட்டுப்பட்டு காலம் காலமாக நடக்கும் ஒரு நிகழ்வு தான் வன்னி குத்து. வன்னி குத்து எனப்படுவது ஒரு சிறிய ஆட்டு குட்டியை கூறிய வேலால் தூக்கி பிடித்து கொண்டே பல தூரம் ஆராசனம் (அருள்) வருபவர் கொண்டு வருவார் . மாடன் சன்னதி முன் அந்த  ஆட்டு குட்டியை இட்டு அதன் காயத்தில் சிறிது மஞ்சனையும் , திருநீறும் இட ஆடு எழுந்து செல்லுமாம் , அடுத்த வருடம் முதல் பலி அந்த ஆடு தானம் .இது தான் வன்னி குத்து என்பது. இது போல பல நேர்ச்சைகள்(ஆனி செருப்பு - முள் பாதம் , பிரம்பு கொடுப்பு என) கோவிலில் நடை பெறும்.
குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முஹூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய் விட்டு ஒரு அகல் விளக்கு (நந்தா விளக்கு என்றால் நல்லது ) ஏற்ற வேண்டும் . அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும் . அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும் . இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி , சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உணமையான தகவல் உங்களை வந்து சேரும் .
வாழ்வில் ஒரு முறையேனும் சித்தூருக்கு செல்லுங்கள் . உங்கள் வாழ்வு கரும்பாய் தித்திக்கும் .
பெயருக்கேற்றார் போல் சித்தூர் சிறிய ஊர் தான் . பங்குனி உத்திரம் அன்று மட்டுமே களை கெட்டும். மற்ற படி மாதா மாதம் வரும் உத்திரம் நாளிலும் கோவிலில் சிறு கூட்டம் வரும் .

அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்

Monday, December 19, 2011

வராஹி


வராஹி

இந்த்த நாமத்தை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (ஆம் வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).

வராஹியின் வரலாறு மொத்தமாக சப்த கன்னிகள் வரலாறு என்று பார்த்தால் ,அன்னை லலிதையால் பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்க அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் தாம். ஆம், எப்படி கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றினாரோ அது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும்  ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி.


 இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்.

கிரி சக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்கிருதா .
இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ,  முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.

வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் { ஒவ்வொரு வராஹியும்  நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள் }. 


ஆனால் பொதுவாக மஞ்சள் உடையும் , முக்கியமாக கலப்பையும் , உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள் ஆக தண்டம் ஏந்த்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பர்கள். நெல்லையப்பர் கோவில் வராஹி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சையில் பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.
ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி {அகிலாண்டேஸ்வரி அம்மை} வராஹி ஸ்வரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.

கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை.
சரி இவ்வளவு நேரம் அம்பிகையின் வடிவம் தோற்றம் பற்றி எல்லாம் சொல்லியாயிற்று . நம் விஷயத்துக்கு வருவோம் .. வராஹி உணர்த்தும் தத்துவம் என்ன ?? எதற்கு வராஹி என்று பார்ப்போமா ?
வராஹியை பற்றிய செய்திகளில் ஒன்று முக்கியமானது . வராஹி வராஹரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்ல படுகிறாள். அதில் வராஹ அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராஹியின் தத்துவத்தை உணர்த்தி விடும் .

வராஹம் என்றால் என்ன ? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான் . என்ன உதவி தெரியுமா ??
பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில்  {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி}  வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

சரி அங்கே உந்துதல் , தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி , நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும் ? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்??என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடைய குண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி.

 எப்படி ஒருவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தான் என்று சொன்னால் அவன் நன்றாக படித்தான் என்பது மறைபொருளாய் உள்ளதோ அது போல் குண்டலினி உயர்வால் நம்முடைய வாழ்வு தானாய் உயரும், ஆக வராஹி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். சரி உயருதல் சரி ,  எங்கிருந்து உயரும் ? எங்கே செல்லும் ? என்றால் எப்போதும் முடங்கி கிடக்கும் மூலாதாரத்தில் இருந்து குண்டலினி எழுந்து ஆக்கினையை அடையும். அப்படியான ஒரு உந்துதலை தருபவள் வராஹி . ஆக ஆக்ஞாசக்க்ரேஸ்வரீ என்னும் நாமம் அன்னைக்கு பொருத்தம் தானே ?


இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய,  அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..
அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்,
ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும்  ஆயுதங்களும்.
சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் ? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , எதிரிகள் குறைவார்கள்{அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது} ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது.


இதனால் தான் வராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.
இப்படி வராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.


ஆனால் வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். அவள் காயத்திரியான
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும்  ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுட்வாள். 
 வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவாள்.
அவளே பகிளாமுகி ,தூமாவதி என்று சொல்லுவார்கள் ..
ஆக வராஹி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராஹியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்
வராஹியின் பாதார விந்தங்களே சரண். அம்மையின் நாமமே துணை..

மன்னிக்கவும் நீளமான பதிவாகி விட்டது.
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்



Thursday, December 15, 2011

ஆண்டாள் - கோதை பிராட்டி


கோதை – ஆண்டாள்

மார்கழி என்றாலே ஆண்டாள் திருப்பாவை தான் நினைவுக்கு வரும். அப்படி கண்ணனே சொன்ன “மாதங்களில் நான் மார்கழிஎன்னும் உயரிய மார்கழியின் நாயகியாகவே விளங்குகிறாள் இந்த சூடி கொடுத்த சுடர் கொடி.

திருவில்லிபுத்தூர் – ஆம் சங்கரன்கோவில், ராஜபாளையம் – வழி மதுரை செல்லும் பாதையில் உள்ள ஒரு ஊர் . அப்படி என்ன பெருமை இந்த ஊருக்கு மற்ற எல்லா ஊரை விட என்று கேட்டால், அதற்க்கு பதில்  நிச்சயம் உண்டு! ஆம்  இந்த ஊரில் தான் வாழ்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் மனித தெய்வம், அரங்கனுக்கே மனைவி ஆகி பெருமை சேர்த்த ஊர்.


யத்பாவம் தத்பவதி
என்றும் சொல்லுவார்கள் ..அதாவது நாம் என்னவாக வேண்டும், எது  நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமே, நினைத்துகொண்டே இருக்கிறோமே  அதுவாகவே நாம் ஆகிறோம் .. அதனால் தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றும் , மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்று பொய்யா புலவன் சொல்லி இருக்கிறான்.

மெய்ஞானத்தின் கூற்று படியும் நம்மை சுற்றி நம் எண்ண அலைகள் சென்று கொண்டு இருப்பதாகவும் . அதற்கு தாக்கம் அதிகம் என்று சொல்லுவார்கள். நாம் நல்லவை எண்ணி நல்லவற்றை செய்து வந்தோமேயானால் அந்த எண்ணங்களின் வலிமையே நம்மை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாவது ஆகும் .

அது போல கண்ணூறு கழித்தல், இறந்த வீட்டுக்கு சென்று வந்தால் குளிப்பது போலவை எதிர்மறையான எண்ணங்களை {அதன் தாக்கத்தை மாற்ற} என்றும் சொல்லுவார்கள் .

 சரி இந்த கதைகளுக்கும் ஆண்டாளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் அதற்கு பதில் இருக்கிறதே, ஆண்டாள் பெரியாழ்வார் தோட்டத்தில் துளசி மடியில் {மகா லக்குமியின் அவதாரமாகவே , பூமி பிராட்டி மடியில்} அன்றலர்ந்த தாமரை  போன்ற முகத்தோடு கிடைக்க பெற்றவள். அவள் சிறு பிராயம் முதலே பெரியாழ்வார் சொன்ன கண்ணன் லீலை கதைகளை கேட்டு, அந்த கண்ணனையே மணப்பேன் என்று உறுதியாக இருந்தாள். அந்த எண்ணத்தை தன மனதில் வைத்தே வாழ்ந்தும் வந்தாள். ஆண்டாள் சிறு குழந்தை முதலே தன்னுடைய எண்ணத்தில் வலிமை உள்ளவளாக இருந்தாள்.

ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என்பார்கள். அது போல கோதை தான் பிறந்த வில்லிபுத்தூரயே பிருந்தாவனமாக பாவித்து, தன்னுடைய தோழிகளயே கோபிகைகளாகவும், அங்குள்ள பொய்கையையே யமுனையாகவும் , வடபத்திரசாயியயே கண்ணனாகவும் {சரி தான் வடபத்ரம் – ஆலிலை சாயி – துயில்பவன் அதாவது ஆலிலையில் துயில்பவன் ஆம் கண்ணன் தானே }
 மார்கழி மாதத்தில் பாவை நோம்பு நோற்று அந்த கண்ணனையே {ரங்கனயே} மணந்தும் காட்டினாள்.



எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
என்பதற்கு மிக சீரிய எடுத்துக்காட்டு ஆண்டாள் தான் . ஆகவே உயர்ந்த எண்ணங்களை எண்ணுதலும், நினைத்த காரியம் நினைத்த உடனே நடக்கவும் ஆண்டாள் வழிபாடு சிறந்தது.

தன்னுடைய தயா உள்ளதை, தாயன்பை , நன்றி நவிலலை ஆண்டாள் தன்னுடைய அர்ச்சை கலைத்து நிரூபித்தும் உள்ளாள்.

அவள் தன்னுடைய நாச்சியார் திருமொழியிலே ஒன்பதாவது பாசுரத்தில் தனக்கு பெருமாளோடு திருமணம் நடந்தால் மதுரை அழகருக்கு நூறு தடா{அண்டா} வெண்ணையும் அக்கார அடிசில்{சர்க்கரைப் பொங்கல் } தருவதாய் வாயால் நேர்ந்து இருந்தாள்.

நாறு நறும்பொழில்மா லிருஞ் சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணைய் வாய் நேர்ந்து பராவிவைத்தேன் ,
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடயோன் இன்று வந்திவை கொள்ளுங்க்கொலோ!


ஆனால் இந்த வேண்டுதல் நடத்துவதற்கு முன்னமே அவள் நாச்சியார் ஆகி விட்டாள். இப்படி இருக்கும் காலத்தே கோதைக்கு பின் வந்த வைணவ மரபின் “திருப்பாவை ஜீயர்“ எம்பெருமானார் ராமானுஜர் கோதையின் பாசுரத்தை படித்து ஐயோ ஆண்டாளின் ஒரு நேர்ச்சை மீதம் உள்ளதே என்று எண்ணி ஆண்டாளுக்காக அவரே அந்த நேர்ச்சையை{பொன் வட்டிலில் நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும்} முடித்து வைத்தார். நேர்ச்சை முடிந்து அவர் திரு வில்லிபுத்தூர் வருங்கால் சூடி கொடுத்த கோதை பிராட்டி தன அர்ச்சை{சிலா வடிவம் } கலைத்து வலது பாதத்தை ஒரு அடி முன் வைத்து வாருங்கள் எம் அண்ணாவே என்று அழைத்தாளாம்.

நன்றி மறப்பது நன்றன்று என்னும் சீரிய வாக்கினிற்க்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி இருக்கிறாள் கோதை பிராட்டி.


ஆக கோதை வழிபாட்டால் சீரிய எண்ணங்களும், சிறப்பான வாழ்வும், எண்ணியவை எண்ணியபடியே நினைத்த நேரத்தில் நிறைவேறவும் செய்யும்.

ஆண்டாள் வில்லிபுத்தூரில் வாழ்ந்த வீடே ஆண்டாள் சன்னிதியாக தனி கோவிலாக விளங்குகிறது. உள்ளே அர்ச்சா ரூபத்தில் ரங்கனும் அந்த ரங்கனயே ஆண்ட ஆண்டாளும் காட்சி தருகிறார்கள்.



            அவளுக்கே உரிய இந்த மார்கழி மாதத்தில் அவளை வணங்கி நம்முடைய எண்ணத்திற்கும் மனதிற்கும் முழு வலிமை கொடுத்து வாழ்வில் வெற்றி பெறுவோமாக.


கோதை நாச்சியாரே சரணம் ! ஆண்டாளின் பாதார விந்தங்களே போற்றி போற்றி !!!
ஆண்டாள் - பக்தி, வைராக்கியம் , அன்பு முதலானவற்றிக்கான தெய்வம். 
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்



Sunday, June 19, 2011

காந்திமதி


காந்திமதி

     நெல்லை . ஆம் இது அல்வாவிற்க்கு மட்டும் சிறப்பான ஊர் இல்லை. ஆன்மீகத்திற்கும் சிறப்பான ஊர் தான். தன் பொருநை என்னும் தாமிரபரணி பாயும் புண்ணிய பூமி.
     தமிழ் முனிவன் அகத்தியன் பாடி பரவிய இந்த புண்ணிய பூமியில் ஊரின் மையத்தில் (டவுண்) பகுதியில் தன கணவராம்  முழு முதல் இறைவனாம் சிவபெருமானோடு கோவில் கொண்டு அருளுகிறாள் காந்திமதி.
     நெல்லையப்பர் கோவில் வரலாறு மிகவும் பழமையானது. அவர் முழுதும் கண்ட பாண்டியனோடு திருவிளையாடல் புரிந்து கோவில் கொண்டவர். அவரின் நாயகியாய் தனிக்கோவிலில்  குடி கொண்டு அருளாட்சி நடத்துகிறாள்.
சரி என சிறப்பு என்று பார்ப்போமா இந்த அம்பாளுக்கு ?
அன்னையின் பெயரே ஆயிரம் கோடி சிறப்பு கொண்டது.
ஆதாவது காந்திமதி =காந்தி +மதி
சரீர காந்தியில்(ஒளியில்) மதியானவள் (நிலவானவள் )
அது என்ன சரீர ஒளி?

     சரீர (தேகம் ) பொதுவாய் பலருக்கும் பல நிறங்களில் இருக்கும் . கருப்போ சிவப்போ அல்லது மாநிறம் என்றோ . தேஜஸ் என்பது ஒரு தன்மை . அது பலருக்கும் எளிதாய் கிடைப்பது இல்லை . இந்த தேஜஸ் நாம் செய்யும் கர்மம், செயல்விளைவாய் , முகத்தில் தோன்றும் பொலிவே . அதை சித்தரிக்கவே பல கடவுள் படங்களில் ஒளிவட்டம் வரைவார்கள் முகத்திற்கு பின்னால்.
     ஆனால் இந்த அன்னையோ தேஜஸ் என்னும் சரீர காந்தியில் நிலவை ஒத்தவள். அது ஏன் நிலவு ? ஒளி என்றால் சூரியன் என்று தானே ? வரவேண்டும் . அது மட்டும் இல்லாமல் நிலவு சூரியனிடம் இருந்து தானே ஒளியை பெறுகிறது. பிறகு ஏன் நிலா ?



     சூரியனின் ஒளி வெப்பம் மிகுந்தது ஆனால் நிலவோ குளிர்ந்த தன்மையை கொண்டது . அது போல் ஜெகதிற்க்கு தாயான அன்னை லலிதையின் ஒளியை அருளை வாங்கி அதை குளிர்ந்த ஒளியாய் மாற்றி நமக்கு தருவதில் வல்லவள் இந்த அன்னை . அது போல் தேஜஸ் வேண்டுவோர் இந்த அன்னையிடம் கேட்டு பெறலாம்                    

     வலது கரத்தில் பூவும் இடது கரத்தை டோல ஹஸ்தமாகவும் (தொங்க விட்ட நிலையில் ) ஒய்யாரமாக நிற்கிறாள் அன்னை . சிவபெருமானுக்கு (நெல்லையபப்ருக்கு ) வலது புறத்தில் தனி கோவிலில் (தனி கோபுரம் , தனி கொடி மரம், நந்தி வாகனம் கொண்டு காட்சி அளிக்குறாள் அன்னை ) . கடைசி வெள்ளி கிழமைகளில் தங்க பாவாடை அணிந்து மனம் நிறைகிறாள். அன்னைக்கு தங்க தேரும் உண்டு.
     நெல்லையப்பர் கோவில் மிக பெரிய கோவில் கற் சிலைக்ளும் சன்னதிகளுக்கும் பஞ்சமே இல்லை. சிவனின் தாமிர சபையும் கொண்ட பூமி. மூங்கில் தல விருக்ஷம். பெருமாளும் சிவா பெருமானின் அருகில் கோவில் கொண்டு உள்ளார்.
     தேரோடும் வீதியில் வலமும் வருவாள் , தெப்பத்தில் குடியும் இருப்பாள்(பொற்றாமரை குளம் அவள் சன்னதிக்கு அருகிலே உண்டு ) , வளைகாப்பு உற்சவமும் அன்னைக்கு நடக்கிறது இங்கே .
     அன்னை மிக மிக வரப்ரசாதி. எண்ணியதை நிறைவேற்றி தருவதில் காமதேனு இவள். 


     சுட்டெரிக்கும் சூரியன் மறையும் வேளையில் (நெல்லை வெப்ப மிகுந்த இடம்) தென்றல் வருடும் பிரகாரங்களையும் , மனதை நிறைக்கும் அருள் வழங்கும் அன்னை காந்திமதியை வணங்கி , இருட்டுக்கடை(கோவிலின் எதிரிலே உள்ளது ) அல்வாவும் வாங்கி சாப்பிட்டு விட்டு வந்தால் மனம் , உடல் மட்டும் ஆன்மாவும் லேசாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்


Tuesday, May 10, 2011

இறைவன் ஒருவரே


இறைவன் ஒருவரே

       மதங்கள் எதுவாக இருந்தாலும் இறைவன் ஒருவராகவே இருக்க வேண்டும். செல்லும் பாதை வெவ்வேறாக இருப்பினும் சென்று அடையும் இலக்கு ஒன்று தான். அதையே முக்தி என்று அழைக்கிறது நம் இந்து மதம்.
       பழமையும் புதுமையும் போற்றும் நம் இந்து மதத்தில் தான் எத்தனை எத்தனை தெய்வங்கள் .. அது ஏன் என்ற ஐயம் அனைவருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும் .. சரி தானே ?
       நம் மனம் தான் இறைவனை பிரித்து வைத்து உள்ளது. இறைவன் ஒருவரே.

         எந்த மதத்தை எடுத்து கொண்டாலும் இறைவன் ஒருவர் தான் என்பதை சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் விடை கிடைத்து விட போகிறது.
ஒருவராயின் அவர் பெயர் ??? அவர் யார் ? அவர் ஆணா இல்லை பெண்ணா ??? அவர் தன்மை என்ன ? அவர் வடிவம் என்ன ??
அவர் தான் பரப்ரம்மம். அவர் ஆணும் அன்று பெண்ணும் அன்று. அது பூரணத்துவம் . அனைத்தும் அவரே. அவருக்கு வடிவம் கிடையாது. பஞ்ச பூதங்களும் அதற்க்கு மேற்பட்ட தன்மையும் அவருக்கு உண்டு. அப்படியானால்  அவரை எப்படி வணங்குவது? எப்படி உணர்வது ?
சற்றே கடினம் தான் . ஆழ்மனதின் அமைதியில் நின்று த்யானத்தில் வணங்க வேண்டும் அவரை. அவரின் வடிவத்தை நாம் உணர்ந்து கொள்ள காலம் அதிகம் ஆகும். தெரிந்து , புரிந்து கொள்ள நாம் ஆன்மீகத்தில் சிறிது தூரம் செல்ல வேண்டி உள்ளது. அதனால் தான் நாம் முதலில் உருவமாய் வடிவமாய் நாம் உணர்ந்து கொள்ள புரிந்து கொள்ள உள்ள வடிவங்களில் உணர்த்து அவர்கள் அருளால் சற்றே ஆன்மீகத்தின் உள்ளே சென்று பின் இவர்களை அடைய வேண்டும்.

       இந்த பரப்ரம்மதிற்க்கும் கோவில் உள்ளது இந்திய திருநாட்டில். கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரளத்தின் கொல்லதிற்க்கு அருகில் உள்ள ஓச்சிரா என்னும் இடத்தில உள்ளது பரப்ரமம் கோவில்.
ஏழை சிறுவன் ஒருவனுக்கு பரப்ரம்மம் காட்சி அளிக்க அந்த சிறுவனால் அவரை உணர்த்து கொள்ள முடிய வில்லையாம். உடனே அருகில் இருந்த போத்து(எருமை மாடு ) வடிவில்  காட்சி கொடுத்தாராம் பரப்ரம்மம்.
அந்த வடிவிலயே( நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் அல்லவா ) உற்சவ காலங்களில் வருகிறார்.



      அது போல உருவம் அற்ற நிலையில் உள்ள இறைவனையும் பல இடங்களில் வணங்கலாம் . சிதம்பரம் கோவிலில் உள்ள ரகசியம்(இறைவன் ஆகாய வெளியாய் ) இருக்கிறார். மேலும் திருவாரூர் கமலாம்பிகை சந்நிதானத்தில் உள்ள பீடம் (யாரும் நம் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளலாம்).

      இவை எல்லாவற்றிக்கும் மணிமகுடமாய் லலிதா சஹாஸ்ரநாமத்தின் அன்னை லலிதை காமேஸ்வரனை உள்ளடக்கிய( உள்ளார்ந்து விளங்கும் ) காமேஸ்வரியாய் ஆண்-பெண் வடிவ பாகுபாடு இன்று வணங்க படுகிறாள்.

[ அன்னை லலிதையாய் விளங்கும் தலங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்]
பரபிரம்மமமே போற்றி போற்றி 
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்



Monday, May 2, 2011

தவம்



     தவம் செய்தால் என்னதான் கிடைக்கும்?தவம்  எதற்கு ? தவம் செய்தல் என்றால் அறிவில் உயருவது என்று பொருள் கொள்ளலாம். தவம் செய்தலால் மன வலிமை , மனோ தைரியம் திடம் முதலானவை கிடைக்கும்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய் தவம்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
என்பது அய்யன் வள்ளுவன் வாக்கு ...
     ஆம் தவம் இருந்தலால்  நாமும் எண்ணிய என்னத்தை ஈடேற்றி கொள்ளலாம். ஆயினும் அதனுள் ஒரு ஆழ்ந்த உண்மை உள்ளது. இறை தவத்தில் உண்மையாக நாம் ஈடு பட்டோமேயானால் பலனை அடையும் நேரத்தில் நாம் அதை விரும்பும் எண்ணத்தில் இருந்து விலகியே இருப்போம். ஆம் அந்த அளவு நம் மனதை சீர் செய்து அதன் பக்குவத்தை உயரத்தி தருவதும் தவமே. அதையும் மீறி அந்த பக்குவத்தை அடையாதவர்கள் போய் சேர்ந்த பாதையை பற்றியும் புராண இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கும்.

     ஆழ்ந்து சொன்னால் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் . உண்மையாக தவம் செய்தால் எண்ணங்கள் வலிமை அடையும். எண்ணம் ஈடேறும்.
[யத்பாவம் தத்பவதி- வேதம்  ]
     சரி இப்படி தவத்தின் வலிமைகள் உள்ளனவே . இதை நமக்கு உணர்த்த ஒரு தெய்வம் இருக்க வேண்டும் அல்லவா ??? இவ்வாறு பல இடங்களில் இறை வடிவங்கள்( பெருமாள், நாச்சியார், அன்னை, தேவர்கள், முருகன்)  தவத்தின் பலனை நமக்கு எடுத்து சொல்லி தருகின்றனர். இமவான் மகளான அன்னையும், பர்வதன் மகள் தாம் பார்வதியும் தவம் செய்தே பலனை பெற்றனர். அது போல காஞ்சி, ஆனைக்கா இப்படி பல இடங்களில் அன்னை தவம் செய்து இருக்கிறாள் என்பது புராணம்.




     பல இடங்களில் அன்னை தவம் இருத்தல் பெரும்பாலும் இறைவனை அடைய அல்லது அசுரரை அழிக்க என்று இருக்கும் . ஆனால் ஒரு தலத்தில் இறைவன் ஒருவனே என்று உணர்த்த அவள் தவம் இருக்கிறாள். ஹிந்து வழிபாட்டு முறையில் சைவமும் வைஷ்ணவமும் சிறப்பாக உள்ளது. காலத்தின் கோலத்தால் சில நேரங்களில் அவர்களுக்குள் யார் பெரியவர் என்கிற பிரச்சனைகளும் வந்தது உண்டு. அதனால் தான்
     அரியும் சிவனும் ஒன்னு ..
     இதை அறியாதவன் வாயுல மண்ணு என்னும் படியான சொல்லும் வந்தது.
     மதுரையிலும் சிவனே பெருமாளாய் வந்த கதையும் உண்டு . இவை எல்லாவற்றிக்கும் மேலாக சங்கரநாராயணர்(அரி-சிவன்) வடிவம் இந்த ஒற்றுமைக்கு ஒரு அடித்தளம்.
“ஒன்றே என்னின் ஒன்றேயாம்

     இந்த வடிவத்தை காணவே ஒரு அன்னை தவம் இருந்தாள். ஆம் மக்களின் நலனுக்காக இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும் என்று அறியையும் சிவனையும் ஒன்றாய் காண்பேன் என்று ஒற்றை காலில் நின்று தவம் செய்து தவத்தின் பெருமையை உணர்த்திய அன்னை தான் கோமதி.

கோமதி – ஆம் சங்கரன்கோவிலின் அரசி.




     சங்கரன் கோவில் – நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் பிரதான தெய்வமாய் தவத்தின் மணிமகுடமாய் , தவத்தின் பலனாய் சங்கரநாரயணரும் காட்சி தர சங்கரலிங்கதோடு அருளாட்சி புரிகிறாள் அன்னை.
      மாதத்தின் கடைசி வெள்ளிகிழமைகளில் அன்னைக்கு தங்க பாவாடை சார்த்த படுகிறது. 
        பாரதியும் கோமதி மகிமை என்னும் தலைப்பில் பாடல்கள் எழுதி இருக்கிறார். 
     சங்கரன் கோவில் ஒரு பிரார்த்தனை தலமும் கூட . சுற்றுவட்டாரத்தில் மக்கள் எங்கும் பாம்பை கண்டால் ஒரு முறை சங்கரன்கோவிலுக்கு செண்டு விட்டு வருவார்கள். மேலும் பல ஊர்களில் கோமதி, ஷங்கர் என்னும் பெயர்கள் வைக்கும் பழக்கமும் உள்ளது.
     அன்னை சிறு பெண் வடிவத்தில் கண்ணுக்கு நிறைவாக இருக்கிறாள். ஸ்ரீசக்கர குழியும் உண்டு இந்த தலத்தில்.



     ஆடி மாதம் அன்னை தபசு (தவம்) இருந்து சங்கர நாரயணரை காண்பாள். அவள் தவசு இருக்கும் காலத்தில் நாமும் சென்று அவளை வழிபாட்டு நம் கோரிக்கையை சொன்னால் தட்டாது நிறைவேற்றும் அன்னை இவள். அன்னை வரப்பிரசாதி என்பதை ஒவ்வொரு ஆண்டும் கூடும் கூட்டமே சாட்சி.
மேலும் கோமதியின் உண்மையான பக்தர்கள் அவர் பெயர் சொன்னாலே கண் கலங்கும் அளவுக்கு அவள் அருலாடல் செய்து உள்ளாள் என்பதற்கு சாட்சி.
ஆக அன்னை விளக்கும் தத்துவம் தான் என்னே ??
     சுயநலம் கருதாது உலக நன்மைக்காக செய்யும் எந்த ஒரு விஷயமும் தோல்வியுற்றதாய் சரித்திரமே இல்லை. மேலும் செய்யுங்கள் தவம் அந்த ஆற்றலை, மனதிடத்தை நான் வழங்குகிறேன்.
     மேலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளும் நாம் முதலில் வைஷ்ணவம், சைவம் என்ண்டும் இரு பேரு தூண்களில் சிக்கி அதுவா இதுவா என்னும் குழப்பத்தில் இருக்கும் காலத்தில் நம் மனத்தை சீர் செய்து இருவரும் ஒருவரே என்று உணர்த்தி நம்மை மேன்மை படுத்துகிறாள் அன்னை கோமதி.

கோமதி தாயே சரணம் .. உன் பாதார விந்தங்களே போற்றி போற்றி ....
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்